நியூசிலாந்தை சேர்ந்த கர்ல் எட்வர்ட் என்ற பிரபல யூடியூபருக்கு இந்தியாவில் நுழைவதற்கு ஒரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்ல் ராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் கர்ல் எட்வர்ட் ரைஸ். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அது குறித்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். இவரது சேனலை 1.79 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். இந்தியை சரளமாக பேசக்கூடியவர். டெல்லியை சேர்ந்த மனிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்பு மனைவி குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்த இவர், இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு பயணம் சென்று இந்தியாவைப் பற்றி மிகவும் மோசமான கருத்துகளை அவரது சேனலில் பதிவிட்டு வந்தார்.
விசா விதிகளை மீறும் வகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும் இவர் பங்கு கொண்டார். விசா விதிகளின்படி, 180 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் இருப்பதற்கான விசாவை புதுப்பிக்க வேண்டும். இல்லை எனில் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். பின்னர் இந்தியாவிற்கு வருவதற்கு விசா புதுபிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில், அதனை மத்திய அமைச்சகம் நிராகரித்துள்ளது.
மேலும் நாட்டை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதன் காரணமாக அவருக்கு இந்தியாவில் நுழைவதற்கு ஒரு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவரது மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது நியூசிலாந்தில் உள்ள இவர் நேற்று தனது யூடியூப் சேனலில் எனது மனைவியை ஏன் 269 நாட்களாக நான் பார்க்கவில்லை என்ற தலைப்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.