தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 4.30 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 34.73சதவீதம் கூடுதலாக வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திர குமார் மற்றும் அலோக் வர்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.