வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க பல விவசாயிகள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜலந்தர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து விவசாயிகள் திரண்டு வருவதோடு ஆங்காங்கே ரயில், பேருந்து சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பேருந்து அல்லது ரயில் மூலமாக டெல்லிக்கு வந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது இருந்தாலும், ரயில் நிறுத்தப் போராட்டம் உள்ளிட்டவற்றை மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். ராஜஸ்தான்-டெல்லி இணைக்கக் கூடிய ஜெய்ப்பூர் நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனவே வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஹரியானா மாநிலத்தில் இருக்கும் முக்கிய நகரங்களில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் வந்து கொண்டிருக்கின்றனர். போராட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது.