ஒரே நாளில் அடுத்தடுத்த 5 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நெருப்பில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பேருந்து நிலையத்தின் அருகில் காந்தி பூங்கா சாலையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இதில் சரவணன் என்பவர் நகை அடகு வைக்கும் கடையும், ரியாஸ் என்பவர் வாட்ச்கடையும், அண்ணாமலை என்பவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்யும் கடையும், பாலமுருகன் என்பவர் செல்போன் கடையும், ருக்மணி என்பவர் ஹோட்டலும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் ஹோட்டல் கடை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து அதன் அருகில் இருந்த மற்ற நான்கு கடைகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது. இதனைகண்ட சிலர் அறந்தாங்கி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால்அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. எனவே ஆவுடையார் கோவில் மற்றும் கீரமங்கலம் பகுதியில் உள்ள தீயணைப்பு துறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமானது. மேலும் இது குறித்து கடையின் உரிமையாளர்கள் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நெருப்பு எப்படி பரவியது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.