ஒரே ஆண்டில் 3வது முறையாக வைகை அணை நிரம்பவுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுமார் 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்நிலையில் தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இங்கிருந்து தண்ணீர் விநியோகம் செய்வது வழக்கம். இதனையடுத்து கடந்த சில தினங்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகின்றது.
மேலும் இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 65.10 அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஓரிரு நாட்களுக்குள் 66 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுபதர்க்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரே ஆண்டில் 3வது முறை வைகை அணை நிரம்பவுள்ளத்தால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.