Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆண்டில் 7…. விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே வீரர் ராசா..!!

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடந்த சூப்பர் 12 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாறு சாதனை படைத்தது. இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது.

அதேசமயம் இரண்டு போட்டிகளிலுமே கடைசி நேரத்தில் நூலிழையில் வெற்றியை கோட்டை விட்ட பாகிஸ்தான அணிக்கு நாக் அவுட் செல்லும் வாய்ப்பு கேள்விக்குறியாகிவிட்டது. சொல்லப்போனால் வாய்ப்பு மிகக்குறைவு. ஜிம்பாவேயின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா தான். அவர் பேட்டிங்கின் போது 9 ரன்கள் எடுத்திருந்தாலும் கூட பந்துவீச்சில் சரியான நேரத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டி ஜிம்பாப்வே பக்கம் திரும்பியது.

இதனால் அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தங்கள் அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கும் அவர் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்கி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று போட்டி முடிவடைந்த பின் கூறியிருந்தார்.. பாகிஸ்தானில் பிறந்த இவர் அந்நாட்டுக்கு எதிராகவே தங்கள் ஜிம்பாப்வே அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து மிரட்டி உள்ளார்..

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம் ஒரு புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.. கடைசி 4 போட்டிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு மட்டும் டி20 கிரிக்கெட்டில் 7 ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றுள்ளார். இதன் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தற்போது முறியடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். ஜிம்பாப்வே அணிக்கு பல வெற்றிகள் இவரால்தான் கிடைத்தது என்பதே நிதர்சனமான உண்மை..

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் :

சிக்கந்தர் ராசா – 7  ஆட்டநாயகன் (2022)

விராட் கோலி – 6  ஆட்டநாயகன் (2016)

சூர்யகுமார் யாதவ் – 5 ஆட்டநாயகன் (2022)

முகமது ரிஸ்வான் – 5 ஆட்டநாயகன் (2021)

சேன் வாட்சன் – 5 ஆட்டநாயகன் (2012)

Categories

Tech |