ஒரே இணைப்பில் TV, Phone, Internet சேவைகளை வழங்க மத்திய அரசின் ரூ.1815.31 கோடி நிதி உதவியுடன் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் பாரத்நெட் திட்டமானது அனைத்து ஊராட்சிகளிலும் கண்ணாடி இலை கம்பிவடம் மூலமாக அதிவேக அலைக்கற்றையை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தினை ரூ.1815.31 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பாரத்நெட் திட்டத்துடன் சேர்த்து தமிழ்நெட் எனும் திட்டத்தின் மூலம் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் மாவட்ட தலைமை இடங்களை கண்ணாடி இலை கம்பிவடம் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக ஒரே இணைப்பில் தொலைக்காட்சி, தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் என 3 டிஜிட்டல் சேவைகளும் வழங்க முடியும். அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அதிவேக அலைக்கற்றையை பயன்படுத்தி வேலைவாய்ப்பு, சேவைகளை ஏற்படுத்துவதன் மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.