மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மந்த்ச்சூர் பகுதியில் மோஜீம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சானுபி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்றதால், அஜ்மேரி ஹலிமா என்பவரை மோஜீம் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சிறிது காலம் கழித்து சானுபி திரும்பி வந்துவிட்டதால் மோஜீமுக்கு இரண்டாவது மனைவி பாரமாகி விட்டார். இதனால் இரண்டாவது மனைவியை அவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நபரின் உதவியோடு தன்னுடைய வீட்டின் ஜன்னல் வழியே ஹலிமா மட்டும் தனியாக இருக்கும் போது இரவு நேரத்தில் ரஸ்ஸல் வைப்பர் பாம்பு என்ற கொடிய விஷ பாம்பை வீட்டுக்குள் விட்டுள்ளார்.
இந்த பாம்பு ஹலிமாவை 2 முறை கடித்தது. இருப்பினும் அவருக்கு எதுவுமே ஆகவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மோஜீம் ஹலிமாவுக்கு தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் விஷ ஊசி போட்டுள்ளார். அப்போது ஹலிமாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு ஹலிமா நலமுடன் இருக்கிறார். இந்நிலையில் மோஜீம், பாம்பு பிடிக்கும் நபர் மற்றும் அவருடைய நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரே இரவில் இரு முறை ஒரு பெண்ணை கொடிய விஷம் உள்ள பாம்பு கடித்தும் அந்தப் பெண் இறக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.