கடன் பிரச்சினையினால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மல் பவுல். 52 வயதான இவர் சிலிண்டர் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு 45 வயதுடைய மோனிகா பவுல் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பூஜா பவுல், நேகா பவுல், மற்றும் சினேகா பவுல் என்று மூன்று மகள்கள் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. அதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஐந்து பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரியவந்தது.
இச் சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நிர்மல் பவுலுக்கு ஏராளமான கடன் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். நிர்மல் பவுலின் முதல் மகள் பூஜா ஆசிரியையாக பணியாற்றுகிறார். இரண்டாவது மகள் மேகா பன்னிரண்டாம் வகுப்பு, மூன்றாவது மகள் சினேகா பத்தாம் வகுப்பு படித்து வந்தார் என்பது தெரியவந்துள்ளது.