காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை கண்ணன் தெருவில் எம்.காம் பட்டதாரியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் உத்திரமேரூர் ஆகும். கடந்த 6 ஆண்டுகளாக ஜெயராமனும், பி.டெக் பட்டதாரியான யுவராணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் யுவராணி தனது காதலனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெயராமனின் தாயும் சகோதரியும் வேலைக்கு சென்று விட்டதால் காதலர்கள் ஆன்லைன் மூலம் மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஜெயராமனின் தாய் தனது மகனும், யுவராணியும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், காதலர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக யுவராணிக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை மும்மரமாக தேடி வந்ததால் மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.