ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் ஒதியத்தூர் கிராமத்தில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பரான ஹரி என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கெடார் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு தனியார் கல்லூரியின் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஹரி, ஜெகன் உள்பட 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது,
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஹரி, அப்துல்லா, ராஜதுரை ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கண்டாச்சிபுரம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று அக்ராபாளையம் பகுதியில் 40 வயதுடைய ஆண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அந்த நபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கச்சிராபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.