ஒரே நாளில் நடந்த இரு வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் சந்தோஷ்சிங்-திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காசிகா (12), யோஷிஜா (2) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடன் சந்தோஷ் சிங்கின் தாயாரான தாராபாயும் வசித்து வந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் காரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். இந்த கார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காஞ்சிகோவில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் சந்தோஷ் சிங் மற்றும் தாராபாய் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பெருந்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்த திவ்யா, காசிகா, யோஷிஜா ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப்போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கேளிக்கை பூங்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வேன் அருண் மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அஜித் , அருண் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி பவானிசாகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த 2 பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.