கோவில் நிலங்களில் வசிப்போர் வாடகை பாக்கி தொகையை கடந்த 2016 ஆண்டு முதலே செலுத்தாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின், சேகர்பாபு அறநிலையத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் பதவியேற்றது முதல் தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கில் மதிப்புடைய நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் கடைகள் ஆகியவற்றின் நிலுவையில் உள்ள வாடகை வசூல் செய்வதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகள், மலைக்கோட்டை வாசல் பகுதி, என்எஸ்சி போஸ் ரோடு, நந்தி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 48 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த கடைகளுக்கு வாடகை பாக்கியானது இருந்து வருவது தெரியவந்துள்ளது.
எனவே கோவிலுக்கு வரவேண்டிய வாடகை பாக்கி தொகையே 5.57 கோடி பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே சுமார் 1 கோடியே 37 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை போல் நாகேந்திரன் என்ற நிறுவனம் என பல நிறுவனங்கள் சுமார் 50 லட்சத்திற்கும் மேல் வாடகை பாக்கி தொகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
எனவே இதுகுறித்த நோட்டீஸ் ஆனது கடைக்காரர்களுக்கு அனுப்பப்பட்டாலும், வாடகை செலுத்தாததால், வாடகை பாக்கி குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அறநிலைதுறை அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக ஏறி, ஒரு நாளில் மட்டுமே ரூபாய் 70 லட்சம் வரை வாடகை பாக்கியை வசூலித்துள்ளனர். ஆகவே இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், இனி வரும் நாட்களில் இது மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.