சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குளாகி பலியானோர் எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் கொரோனா தொற்று வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் அங்குள்ள பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் வேகமாக இந்த வைரஸ் பரவியது. இந்த வைரஸ் முதலில் பரவ தொடங்கிய உகானில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருந்தன.
கொரோனா தொற்று வைரஸ்சின் பாதிப்பினால் இதுவரை உகானில் இருந்த அமெரிக்க பெண் மற்றும் ஜப்பானிய ஆண் என 2 வெளிநாட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதேபோன்று, பிலிப்பைன்ஸ் தீவில் வெளிநாட்டவராக இருந்த சீனர் ஒருவர் மற்றும் ஹாங்காங் நாட்டில் ஒருவர் என சீனாவை கடந்தும் வெளிநாடுகளில் கொரோனாவால் இருவர் பலியாகினர்.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி சீனா நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 81 பேர் உயிரிழந்தனர். இதோடு சேர்த்து பலி எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது. அதோடு 2,147 பேர் கூடுதலாக வைரஸ் பாதிப்பிற்குள்ளாக்கினார். இதனால் சீனா முழுவதும் 36,690 பேருக்கும் கூடுதலாக கோரோனா வைரஸ் நோய் பாதிப்பிற்குள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2002 , 2003ஆம் ஆண்டுகளில் சீனாவில் சார்ஸ் வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இதைதொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் உயிரிழப்பு எண்ணிக்கை , புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 908 ஆகவும், 1,011 ஆகவும் உச்சம் தொட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்தது. இதேபோன்று புதிதாக 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் சீனா முழுவதும் 44,200 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 242 பேர் பலியான நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,350ஐ கடந்துள்ளது. இதேபோன்று கூடுதலாக 14,840 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது. சார்ஸ் வைரஸ் தாக்குதலால் சீனாவில் 774 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.