பீடி அலுவலகத்தை முற்றுகையிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துகிருஷ்ணபேரி, சுரண்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனியார் பீடி கம்பெனியின் கீழ் ஏராளமான பெண்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பள பணத்தை சரியாக வழங்காததை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையத்தில் இருக்கும் பீடி கம்பெனி அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சம்பள பாக்கியை உடனடியாக வழங்குவது, வருங்கால வைப்பு நிதியை சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் பி.எப் கணக்கில் 2 மாத கால அவகாசத்தில் செலுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.