ஒரே சமயத்தில் வங்க கடலிலும், அரபிக் கடலிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கன மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளிலும் கனமழை பெய்வதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இயல்பை விட பல மடங்கு அதிக மழை பெய்து வருவதால் மழை எப்போது நிற்கும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே வங்கக்கடலில் நாளையும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதியும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் தற்போது புதிதாக இரண்டு புயல்கள் உருவாவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தமிழகம் தாங்குமா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.