கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபலட்சுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 22-ஆம் தேதி லட்சுமிக்கு சுக பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைகளை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அதன்படி மூன்று குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பெண் குழந்தைகளை வார்டுக்கு மாற்றிய டாக்டர்கள் தாயும், மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவலட்சுமி கூறியதாவது, எனது கணவர் கூலி வேலை செய்கிறார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதி இல்லை. இதனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தோம். இங்கு நல்ல முறையில் டாக்டர்கள் பிரசவம் பார்த்ததால் எனக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. நாங்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 3 பெண் குழந்தைகளையும் வளர்க்க சிரமமாக இருக்கிறது. எனவே அரசு உதவ செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.