கேரளாவில் கோழிக்கு அறுவை சிகிச்சை செய்து இரண்டு முட்டைகளை மருத்துவர்கள் எடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரசவ நேரத்தில் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெளியே குழந்தை எடுப்பது போல கேரளாவில் முட்டை போட முடியாமல் தவித்த கோழிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த விஸ்வாம் பரன் என்பவர் தனது வீட்டில் ஏராளமான கோழியை வளர்த்து வருகிறார். தினமும் முட்டை போட்டு வரும் கோழி ஒன்று கடந்த சில நாட்களாக முட்டை போடாமல் கூட்டுக்குள் முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த விஸ்வாம் பரன் கூண்டில் இருந்த கோழியை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். கோழியை பரிசோதித்த மருத்துவர்கள் , கோழியின் வயிற்றுக்குள் இரு முட்டைகள் சிக்கி இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கோழிக்கு மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த முட்டைகளை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். தற்போது சிசேரியன் செய்ய பட்ட கோழி நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் , கோழி வயிற்றுக்குள் இரு முட்டைகள் சிக்கிக் கொள்வது என்பது அபூர்வம் என தெரிவித்தனர்.