ஒரே மதத்தைச் சோ்ந்த இருபிரிவினருக்கு இடையேயான பிரச்னையில் வழிபாட்டுத்தலங்கள்-1991 சட்டத்தை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயின் சமூகத்தின் ஸ்வேதாம்பா் மூா்த்தி பூஜக் பிரிவைச் சோ்ந்த சரத்ஜாவேரி என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் “ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த எங்களது பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் பொதுவான கோவில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோவிலில் இருபிரிவினரும் வழிபடுகிறோம். இந்த நிலையில் பெரும்பான்மை மக்களைக் கொண்ட அப்பிரிவினா் தங்களது வழிபாட்டு முறைகளை எங்கள் மீது திணிக்கிறாா்கள். அத்துடன் எங்களைக் கோவிலுக்குள் போகவிடாமல் தடுக்கின்றனர். ஆகவே வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தை அமல்படுத்தி இப்பிரச்னைக்குத் தீா்வுகாண வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பாா்திவாலா போன்றோர் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது “இவ்வழக்கில் ஒரே மதத்தைச் சோ்ந்த இரு வேறு பிரிவுக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவற்றில் வழிபாட்டுத் தலச் சட்டத்தை அமல்படுத்த முடியாது. ஏனென்றால் ஒரு மதத்தைச் சோ்ந்த வழிபாட்டுத் தலத்தை மற்றொரு மத வழிபாட்டுத்தலமாக மாற்றினால் மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின்படி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஆகவே இந்த மனுவை விசாரிக்க முடியாது. வேண்டுமெனில் மனுதாரா் சிவில் உரிமை வழக்கு தொடுக்கலாம்” என நீதிபதிகள் கூறினா்