Categories
தேசிய செய்திகள்

ஒலிப்பெருக்கி மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்… குவியும் பாராட்டுக்கள்…!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கிராமத்திற்கே சென்று ஒலிபெருக்கி மூலம் பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கொரோனா வைரஸ்,  ஊரடங்கு ஆகியவற்றால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறை தற்போது முற்றிலும் மாறி வருகிறது. குறிப்பாக பள்ளிக்குச் சென்று பாடங்களை பயின்று வந்த மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நகர்புற மாணவர்களுக்கு ஏற்றதாக இருந்தாலும்  கிராமப்புற மாணவர்களுக்கு அது எட்டா நிலையாகவே உள்ளது. போதிய இணைய வசதி  இல்லாமல் உள்ள கிராமங்களுக்கு ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்று தருகின்றனர்.

அந்த வகையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஒலிபெருக்கியை பயன்படுத்தி கொமகான் கிராமத்தில் 220 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். மகாசமுந்த் மாவட்டத்தின் கொமகான் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் விஜய் சர்மா. இவர் கொமகான் கிராமத்தில் உள்ள பக்பஹாரா பகுதியில் நான்கு ஒலிபெருக்கி வைத்து மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து வருகிறார். இவரது வருகையை அறிந்து கொமகான், லுகுபாலி, கோய்னாபஹ்ரா ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் புத்தகங்களுடன் பக்பஹாரா பகுதிக்கு வந்த பாடங்களை கற்கின்றனர்.

அங்கு அவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து பாடங்களை கற்றுக் கொள்கின்றனர். பக்பஹாரா பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வரும் ஆசிரியர்கள் மத்தியில், ஒலிபெருக்கி மூலம் பாடங்களை நடத்தும் விஜய் சர்மா போன்ற பல ஆசிரியர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |