ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் ஏற்கனவே தேர்வாகிவிட்டன. இவ்விரு அணிகளும் சமீபகாலமாக தொடர் வெற்றிகளை பெற்றுவருவதால் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் இம்முறை இந்திய அணி பதக்கம் வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,
”டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் எங்கள் அணியிடமிருந்து நல்ல முடிவை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நாங்கள் கடந்த சில மாதங்களாக ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறோம். விளையாட்டு போட்டிகளில் உள்ள அனைவருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். தங்கள் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே அனைத்து தடகள வீரர்களின் விருப்பம். நாங்கள் இம்முறை ஒரு அணியாக இந்த ஒலிம்பிக்கில் பதக்கத்தை கொண்டுவருவதில் உறுதியாக உள்ளோம்.
இந்திய அணியில் உள்ள அனைத்து வீராங்கனைகளும் நல்ல உடல்தகுதியுடன் உள்ளனர். அவர்கள் பல சர்வதேச அணிகளுடன் மோதிய அனுபவத்தோடு இருப்பதால் அவர்களால் எந்த ஒரு அணியையும் எதிர்கொள்ள முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.
ராணி ராம்பால், சமீபத்தில் உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றார். இது தவிர இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனக்கு இந்த விருதுகள் கிடைத்ததற்கு இந்திய அரசு, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய ராணி ராம்பால், இந்த விருதை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு சமர்ப்பணம் செய்வதாக கூறினார்.