ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ‘சிர்கான்’ என்கிற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷியா தயார் செய்துள்ளது. 1,000 கி.மீ. வரை சென்று இலக்கை அழிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த ஏவுகணையை ரஷியா நேற்று வெற்றிகரமாக சோதித்தது. காலை ரஷிய ஆர்க்டிக்கில் உள்ள வெள்ளைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட சிர்கான் ஏவுகணை, 350 கி.மீ. வரை சென்று அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி ரஷிய அதிபர் புதின் பிறந்தநாளின் போது சிர்கான் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதும், அப்போது அவர் “சிர்கானின் சோதனை வெற்றி, எங்கள் ராணுவப்படைகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ரஷியா முழுவதிலும் ஒரு பெரிய நிகழ்வு” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.