காட்டு யானை கார் மற்றும் அரசு பேருந்தை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் காரப்பள்ளம் சாலையில் உலா வந்து வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே நின்று கொண்டு அவ்வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது.
இதனால் அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். நீண்ட நேரமாக காட்டு யானை குட்டியுடன் சாலையில் நின்றதால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதன்பின் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.