பெற்றோர் படிக்கச்சொல்லி கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சேர்ந்தவர்கள் வீரக்குமார்-விஜயகுமாரி தம்பதியினர். வீரக்குமார் பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராகவும் விஜயகுமாரி துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இத்தம்பதியினருக்கு விஷால் மற்றும் அத்விக் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் விஷால் அவிநாசியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் விஷாலை அவ்வப்போது நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டித்துள்ளனர்.
சம்பவத்தன்று பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட தனது தம்பியுடன் விஷால் தனியாக இருந்துள்ளான். பெற்றோர் கண்டித்ததால் விஷால் மனமுடைந்து தனது தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான். மதியம் உணவு இடைவேளையில் விஜயகுமாரி வீட்டிற்கு வந்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த அவர்கள் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.