மராட்டியத்தை சேர்ந்த தம்பதிகள் அவினாஷ் – ஜெயஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயஸ்ரீ தன்னுடைய குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தை சரியாக பாடம் கற்காமல் இருந்துள்ளதால் ஜெயஸ்ரீ குழந்தையை அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவினாஷ் மனைவியிடம் சண்டையிட்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி ஜெயஸ்ரீயை, அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். ஜெயஸ்ரீயின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதால் ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்துள்ளார். ஜெயஸ்ரீயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வருவதற்கு முன்னரே அவினாஷ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவினாஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளின் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.