மேற்கு ஆப்பிரிக்காவில் வேலை இழந்து பசி பட்டினியோடு தவிக்கும் வேடசந்தூர் லாரி டிரைவர் உட்பட 3 பேரை மீட்க கோரி அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகில் கருக்காம்பட்டியில் வசித்து வருபவர் 42 வயதுடைய செந்தில்குமார். இவருக்கு தீபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளார்கள். செந்தில்குமார் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் செந்தில்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் வசித்து வரும் 47 வயதுடைய பழனிமுத்து, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வசித்துவரும் 41 வயதுடைய ஜெய்சங்கர் ஆகிய 3 பேரும் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலமாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பர்க்கினா பாசோ நாட்டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்காக லாரி ஓட்டுனராக சென்றுள்ளனர்.
அப்போது அங்கு பணி செய்து கொண்டிருக்கும் போது ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரம் அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் உட்பட 3 பேரை சரியாக பணி செய்ய தெரியவில்லை என்று கூறி வேலையிலிருந்து அனுப்பிவிட்டார். இதனால் அந்த மூன்று பேரும் அந்த நாட்டிலிருந்து வரமுடியாமல் கடந்த 10 தினங்களாக தவித்து வருகிறார்கள். அங்கு இருக்கின்ற தெருவோர மரத்தடியில் பசியோடும் பட்டினியோடும் இருந்து, சொந்த நாட்டிற்கு வருவதற்கு தனியார் நிறுவனத்திடம் கேட்டும் பாஸ்போர்ட் தர மறுத்துவிட்டார்கள்.
இதுதொடர்பாக இந்திய தூதரகத்தில் செந்தில்குமார் உட்பட 3 பேரும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் செந்தில்குமார் வேடசந்தூர் பகுதியில் உள்ள தனது நண்பருக்கு வாட்ஸ் அப்பில் பசியோடும் பட்டினியோடும் தவித்து வருவதாக கண்ணீரோடு பேசி வீடியோ அனுப்பி உள்ளார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் மேற்கு ஆப்பிரிக்காவில் தவிக்கும் செந்தில்குமாரை மீட்க திண்டுக்கல் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதே போன்று மற்ற இரண்டு பேரின் குடும்பத்தினரும் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.