நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் தொடர்ந்து பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி வருகிறது. கடந்த வருடம் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
இதேபோல் நயன்தாராவின் நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் போன்ற படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.