சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக இருவர் உயிர் தப்பிவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சுரைக்காய்பட்டி இப்பகுதியில் கணேசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேசன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரை கதிர்வேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை பைபாஸ் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் 2 பேரும் காரை சாலை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளனர்.
அப்போது திடீரென கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமாகியது. கரும்புகை வெளியேறியவுடன் கணேசனும், கதிர்வேலும் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.