ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது முதலாளிக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக விழுப்புரம் நோக்கி சென்றுள்ளார். இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது திடீரென கார் எஞ்ஜினில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில் காரை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.
அதன்பிறகு சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து செந்தில் உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.