சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேவியானந்தல் கிராமத்தில் கூலி தொழிலாளியான பரசுராமன்(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவர் பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பேருந்தில் தாயுடன் ஆறு வயது சிறுமி பயணித்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறுமியின் தாயார் பரசுராமனுக்கு அருகில் தனது மகளை அமர வைத்துள்ளார். அப்போது பரசுராமன் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் சக பயணிகளின் உதவியோடு பரசுராமனை பிடித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரசுராமனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் மிதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.