மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலைய 3-வது நடைமேடையை அடைந்து பிறகு புறப்பட்டது. அப்போது ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனால் கால்கள் துண்டான நிலையில் படுகாயத்துடன் கிடந்த அந்த நபரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வடிவேல்(38) என்பது தெரியவந்தது. அவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். மாதனூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வேலைக்கு செல்வதற்காக ரயிலில் ஏறிய போது வடிவேல் கால் தவறி கீழே விழுந்தது தெரியவந்தது.