லக்னோவிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவில் லக்னோ – மும்பை செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஏறியது. படுக்கை பெட்டியில் (ஸ்லீப்பர் கோச்) ஏறிய அக்கொள்ளையர்கள் பயணிகளிடம் கூர்மையான ஆயுதங்களைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்தனர்.
அப்போது 20 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவரை அவரது கணவர் மற்றும் சக பயணிகளின் முன் ஓடும் ரெயிலில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் கணவர் மற்றும் சக பயணிகளையும் கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். ரெயில் மும்பையின் கசரா ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் கூச்சலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் கொள்ளையர்களில் 4 பேரை விரட்டிப்பிடித்து கைது செய்தனர். ஆனால், எஞ்சிய 4 கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கசரா ரெயில் நிலைய ரெயில்வே போலீசார் தப்பியோடிய 4 கொள்ளையர்களையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய எஞ்சிய 4 கொள்ளையர்களையும் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் 4 பேர் ஏற்கனவே பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.