சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே வேர்கிளம்பி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் திருவட்டார், சாமியார் மடம், அழகியமண்டபம், சித்திரங்கோடு ஆகிய 4 ஊர்களின் சாலைகளும் இணைகிறது. இதைத்தொடர்ந்து கண்ணனூர் ஊராட்சி மற்றும் கோதநல்லூர், வேர்கிளம்பி பேரூராட்சிகளின் எல்லையாகவும் அமைந்துள்ளது. இந்த சாலைகளின் வழியாக அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் போன்ற பல்வேறு வாகனங்கள் செல்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி வீடுகள் மற்றும் அந்த பகுதிகளில் இருக்கும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மழைநீர் ஓடை வழியாக கண்ணனூர் ஓடையில் சென்று கலக்கிறது. இந்நிலையில் கனரக வாகனங்கள் சாலையில் செல்வதால் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் மேற்புறத்தில் கசிகிறது. இதன் காரணமாக சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகள் பள்ளமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதை சரி செய்து சாலைகளை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.