ஓட்டலில் ஏ.சி வெடித்து கடை ஊழியர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகில் மகேந்திரா சிட்டி பக்தசிங் நகரில் மகேஸ்வரி என்பவருடைய வீடு உள்ளது. இவருடைய வீட்டில் சிறியதாக ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்த ஹோட்டலில் வடமாநிலத்தை சேர்ந்த 26 வயதுடைய ராம்குமார் என்பவர் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ஓட்டல் இருக்கின்ற மொட்டை மாடியில் ராம்குமார் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஏசியின் வெளிப்பகுதி பெட்டியிலிருந்து கரும்புகை வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம்குமார் உடனே கீழே இறங்கி வந்து பார்த்தபோது ஏசி வெடித்துச் சிதறியது. உடனே அருகில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த ராம்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து மறைமலை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.