வாகனத்தை ஓட்டுவதை விட அதற்குரிய ஓட்டுநர் உரிமம் பெறுவதுதான் கடினமான ஒன்று. ஏனென்றால் ஓட்டுநருக்கான உரிமத்தினை, RTO நடத்தக்கூடிய சோதனையில் தேர்ச்சியடைந்த பிறகுதான் பெற வேண்டும். ஆனால் இனி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் தற்போது டிஜிட்டல்மயமாக்கப்பட்டு விட்டதால் பல்வேறு விஷயங்களும் டிஜிட்டல் முறையிலேயே செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி புது விதியின் அடிப்படையில், பொதுமக்கள் ஓட்டுநர் பள்ளியில் சேர்ந்து அங்கு தேர்ச்சி பெற்று, ஆர்டிஓவில் கூடுதல் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதன் உரிமம் பெறுவதற்குரிய முழு சோதனையையும் பயிற்சி மையத்திலேயே முடித்துக்கொள்ளலாம். இதை செய்ய உங்களது பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்றிருக்கும் ஓட்டுநர் பள்ளிகளை நீங்கள் முதலாவதாக தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
பின் அந்த ஓட்டுனர் பள்ளியில் நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றதும், அப்பள்ளி உங்களுக்கு தேர்ச்சி சான்றிதழை வழங்க வேண்டும். இந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் உங்களுக்கு 8 மணி நேர கோட்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும். பயிற்சிக்கு பின் சான்றிதழில் உங்களது சாலை நடத்தை, போக்குவரத்து விதிகள் குறித்த அறிவு, முதலுதவி பயிற்சி மற்றும் பயிற்சியின்போது ஓட்டப்படும் மொத்த கிலோ மீட்டர்கள் ஆகிய பல முக்கியமான விபரங்கள் இடம்பெறும்.
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் அதன் சான்றிதழுடன் பெர்மிட் பேப்பர்களையும் சேர்த்து உங்களது உள்ளூர் ஆர்டிஓவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து எந்த வித சோதனையும் இன்றி ஓட்டுநர் உரிமமானது வழங்கப்படும். இம்முறையின் வாயிலாக உள்ளூர் ஆர்டிஓக்களின் வருகையும், அதிகாரிகளுக்கு அலுவலகங்களில் உள்ள அழுத்தமும் குறைந்து விடும். மேலும் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்காக நீண்டநேரம் வரிசைகளில் காத்திருந்து நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவையில்லை.