அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூருவை சேர்ந்த புகழேந்தியை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கையில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கூறப்பட்டிருப்பதாக புகழேந்தி சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான மனுவை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு கொடுக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் புகழேந்தியின் பெயரை கெடுக்கும் விதமாக எந்த வார்த்தைகளும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை எனவும், ஒரு உறுப்பினரை பதவிநீக்கம் செய்யும் போது அதற்கான காரணத்தை வெளிப்படையாக கட்சியினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அந்த அறிக்கையை வெளியிட்டு இருந்ததாகவும் வாதிட்டார். இதனை விசாரித்த நீதிபதி கட்சியில் இருந்து நீக்குவதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையில் எந்த அவதூறு பரப்பும் விதமான வசனங்களும் இடம் பெறவில்லை என்பதால் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தார்.