மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது: “அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தையடுத்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா.
அது போல பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன், ஆர் எம் வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் ஏற்றுக்கொண்டு கழகத்தில் பதவிகளை வழங்கினார். அதுபோல தற்போது அதிமுகவை விட்டு விலகி இருக்கும் ஓ பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்” என்று தெரிவித்தார்.