முத்துநாயக்கன்பட்டியில் தலைமை ஆசிரியையை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டார்கள்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரை அடுத்திருக்கும் முத்துநாயக்கன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றார்கள். இப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில் தலைமையாசிரியராக வசந்தகுமாரி என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்தப் பள்ளியில் பழமையான கட்டிடம் சேதம் அடைந்து காணப்பட்டதை அடுத்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராமலிங்கம் என்பவர் சில ஆசிரியர்களின் உதவியுடன் சீரமைத்ததையடுத்து, தலைமையாசிரியை வசந்தகுமாரி தனது அனுமதியின்றி எப்படி சீர் அமைக்கலாம் என திட்டி இருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் ஆசிரியர்களின் அறையை பூட்டியதாகவும் யாரும் உள்ளே வர கூடாது எனவும் தலைமையாசிரியை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் வெளியிலேயே அமர்ந்து பணியில் ஈடுபட்டதை அடுத்து இது குறித்து அந்த பகுதி பொது மக்களுக்கு தெரிய வந்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபொழுது அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கோரி 30க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியை பணி மாற்றம் செய்யக்கோரி அங்கு கூடினார்கள். மேலும் இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கின்றனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியுள்ளதாவது, பள்ளி தலைமையாசிரியை அடிக்கடி இதுபோன்ற பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றார். இதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகின்றது. ஆகையால் வேறு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.