Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஓமலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் குறைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஓமலூர் சட்டமன்ற தொகுதி உருவானாலும் அடுத்த இரண்டு தேர்தல்களில் தாரமங்கலம் தொகுதியின் சேர்க்கப்பட்டிருந்தது. பின்னர் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டு பொது தொகுதியாக மாறிய ஓமலூர் தொகுதியில் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன.

1989 தேர்தலில் அதிமுகவின் ஜெயலலிதா அணி வென்றது. பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர் அணி 1 முறை வெற்றி பெற்றுள்ளன. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவின் வெற்றி வேல் உள்ளார். ஓமலூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,94,712 ஆகும். பின்தங்கிய தொகுதியான ஓமலூரில் சாமந்தியும், கரும்பும் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் சாமந்தி திருப்பதி கோவில் சுவாமி அலங்காரத்திற்காக கொண்டு செல்லப்படுகின்றன.

திருப்பதியில் லட்டு பிரசாதம் தயாரிக்க ஓமலூரில் இருந்து குண்டு வெல்லம் அனுப்பப்படுகிறது. கயிறு தொழிற்சாலை, வாசனை திரவிய தொழிற்சாலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றை உருவாக்குவதற்கு நீண்டகாலமாக வெற்று வாக்குறுதியாகவே நீடிக்கிறது. சாமந்தி பூக்களை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு தேவை என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஓமலூரில் வேலையின்மை முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. தினசரி கட்டிட வேலைக்காக செல்லும் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்புவது இதற்கு சான்றாக உள்ளது.

தொகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு சரபங்கா என 2 நதிகள் ஓடினாலும் முறையான பராமரிப்பு இல்லாததால் அவை சாக்கடைகளாகவே  காட்சியளிக்கின்றன. தோல் பதனிடும் ஆலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எம்எல்ஏ தொகுதி பக்கமே வருவதில்லை என்றும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அப்பகுதியினர் துணிகளை காயவைக்கும் இடமாகவும் பயன்படுத்தியதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |