இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 15-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.