போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வு கால பலன்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக ஆட்சி அமைத்து 10 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களையும், அகவிலைப் படியையும் கூட தராமல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்புத் தொகை ஏதும் வழங்கப்படாத சூழ்நிலை தற்போது நிலவுவதாகவும், கொரோனா நோய்த் தொற்று குறைந்து இயல்பு நிலைக்கு தமிழகம் வந்துள்ள போதிலும், 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் வருவாயும், போக்குவரத்து கழகங்களின் வருவாயும் ஓரளவு உயர்ந்து வருகின்ற நிலையிலும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தெரிவித்துள்ளதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன.
கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து விட்டதால் ஓய்வூதியப் பயன்கள் விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் ஆகியவற்றை கடன் வாங்கி போக்குவரத்துத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். தற்போது வாங்கிய கடனுக்கான வட்டியைக் செலுத்தஇயலாத நிலைமைக்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சில பேர் ஓய்வூதியப் பயன்கள் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்த உத்தேசித்துள்ளனர். அதன்பின் இன்னும் சிலர் மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. தற்போது பணியில் இருப்பவர்கள், தங்களுக்கும் நாளை இதே நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர். நியாயமாகவும், சட்டப்படியும் கொடுக்க வேண்டிய ஓய்வு காலப் பயன்களையும், அகவிலைப்படியையுமே அளிக்காத நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியம் என்ற திமுக அரசின் வாக்குறுதி கேள்விக்குறியாகிவிட்டது. இவ்வாக்குறுதி போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தற்போது நிலைநாட்டப்பட்டுவிட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற மனநிலைக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களும், ஓய்வூதியதாரர்களும் வந்துவிட்டனர்.
எனினும் சட்டப்படி போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஊதியம் போன்றவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நிதி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இல்லை என்றாலும் கூட, தேவையான நிதியை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆகவே முதல்வர் இதில் உடனே தலையிட்டு, ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கான பயன்களை உடனடியாக வழங்க ஆவன செய்துதிடுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.