ஓய்வு பெற்ற நர்ஸ் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையம் பகுதியில் சாத்துன்பீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக சாத்துன்பீயின் கணவர் ஜாகிர் உசேன் இறந்து விட்டதால் அவர் தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாத்துன்பீ மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அக்டோபர் மாதம் வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 9 1/4 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது. ஆனால் வீட்டின் கதவு, ஜன்னல் மற்றும் பீரோ எதுவும் உடைக்காமல் நகை திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சாத்துன்பீ சூரம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வீடு வீடாக சென்று கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆனந்தகுமார் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது சாத்துன்பீ வீட்டில் கழிவறையை சுத்தம் செய்யும் போது அவருக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நகை திருடியது தெரிய வந்தது. அவரிடம் இருந்து காவல்துறையினர் 8 1/2 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர். மேலும் ஆனந்த குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.