ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் உயிர்வாழ்சான்றிதழை பதிவுசெய்வதற்கான வழிகாட்டுமுறைகள் என்ன..? என்பது பற்றி மாநகராட்சியானது வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வருடந்தோறும் ஜூலை -செப்டம்பர் மாதம் வரை உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க வேண்டும். இதனிடையில் அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில், ஜீவன் பிரமாண் செயலி வாயிலாக மின்னணு அந்த சான்றிதழை அளிக்கலாம். இந்திய அஞ்சல்துறை வங்கியின் சேவை வாயிலாக ரூபாய் 70 செலுத்தி வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ் சான்றிதழை பதிவுசெய்யலாம்.
அத்துடன் அரசு இ-சேவை மற்றும் பொதுசேவை மையங்களின் வாயிலாக ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு ஆண்டு உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்யலாம். வெளிநாட்டில் வசித்துவரும் ஓய்வூதியர்கள் அந்த சான்றிதழ் படிவத்தினை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இந்திய தூதரக அலுவலர், நீதிபதி சான்று உறுதி அலுவலரிடம் உயிர்வாழ் சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் வாயிலாக அனுப்பலாம். ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் நேரடி முறையில் அந்த சான்றிதழ் அளிக்க ஏதுவாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக ரிப்பன் கட்டிட வளாகத்தில் முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அங்கேயும் பதிவு செய்யலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.