மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசின் நிர்ணயத்தின்படி மாத சம்பளம், அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் இதர பலன்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அரசின் ஊழியர்கள்தான் அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க உதவி செய்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நலன் மிகவும் கவனிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களை போன்றே ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
அண்மையில் போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் 7-வது ஊதியகுழு பரிந்துரையின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முன்பாக அரசு அறிவித்து இருந்தது.
7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி கடந்த 1998 -2015 ஆம் வருடம் வரையிலான காலக்கட்டத்தில் பணி ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக்கோரி போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் கடந்த 2016 -2017 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் 7-வது ஊதியக்குழு ஓய்வூதியம் வழங்குவது பாரபட்சமானது எனக்கூறி, 2016ஆம் அண்டுக்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் அந்த அடிப்படையில் ஓய்வூதியமும், நிலுவைத் தொகையும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.