Categories
தேசிய செய்திகள்

ஓராண்டுக்குப் பிறகு…. கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்…. என்ன தெரியுமா…?

கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்தில் வெடிபொருள் நிரப்பப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 15 வயதான ஒரு கர்ப்பிணி யானை வெடிபொருள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை சாப்பிட்ட போது தாடை மற்றும் நாக்கு வெடித்து படுகாயம் அடைந்தது. இதனால் இரண்டு நாட்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. காயமுற்ற யானையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வந்தன. பிரேத பரிசோதனையின் போது தான் அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது மேலும் வேதனையை ஏற்படுத்தியது.

அன்னாச்சி பழத்தில் வெடிபொருட்களை யார் வைத்தார்கள் என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. மூர்க்கத்தனமாக வெடி பொருட்களை பயன்படுத்தி யானையைக் கொலை செய்தவர்களை பிடிக்க வேண்டுமென்று கேரள அரசு தீவிரம் காட்டி வந்தது. அதுமட்டுமில்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்தால் 50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அதன்பிறகு விசாரணையில் தான் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த பழத்தை அந்த யானை சாப்பிட்டு உயிரிழந்த விவகாரம் தெரிய வந்தது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக தேடப்பட்டு வந்த அப்துல்கரீம் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில், இரண்டாவது குற்றவாளியான ரியாசுதீன் என்பவர் கடந்த 16ம் தேதி பாலக்காட்டில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை காவலில் எடுத்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டு ஓர் ஆண்டை கடந்த நிலையில் தற்போது ஒருவர் சரணடைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரிடம் தலைமறைவாக உள்ள நபரை பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் அவரும் பிடிக்க படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |