ஓ.பி.எஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதன் காரணமாக ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் அ.தி.மு.க குழுவை மாற்றியமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து சபாநாயகரிடம் கோரிக்கை வந்தால், உடனடியாக அந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும், பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருப்பதாகவும் ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து ஒரு கடிதம் எழுதி சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது ஓ.பி.எஸ் தரப்பில் மட்டுமே கடிதம் வந்துள்ளது. அது தவிர வேறு கடிதங்கள் எதுவும் வரவில்லை. இதனையடுத்து ஓ.பி.எஸ் கடிதம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கவர்னரிடமிருந்து நீட் மசோதா விலக்கு குறித்து எந்த பதிலும் வரவில்லை என்றும், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான மனுவை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறார் என நம்புகிறோம் என்றும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை என்றால் மக்களை புறக்கணிப்பதாக கருதப்படும் எனவும் கூறியுள்ளார்.