ஒ. பன்னிர் செல்வம் தான் நிரந்தர முதல்வர் என்று தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில், இந்த சுவரொட்டிகள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்ததில் இருந்த சர்ச்சை தொடங்கியது. அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர். பி. உதயகுமார், பாண்டியராஜன், ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை கூறி வந்தனர். இதனால் வரும் 2021 ஆம் தேர்தலில் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓபி.எஸ் சொந்த தொகுதியான போடியில், அடுத்த முதல்வர் ஓபி.எஸ் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபி.எஸ் என்றும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓபி.எஸ் என்றும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் சர்ச்சைகள் எழுந்ததால் பெரியகுளத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் திடீரெனக் கிழிக்கப்பட்டுள்ளன.