பிரதமர் நரேந்திர மோடி சென்ற 2018 ஆம் வருடம் சுதந்திரதின உரையில் “ககன்யான்” திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என குறிப்பிட்டார். அந்த வகையில் ரூபாய் 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதற்குரிய பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இப்போது இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படவுள்ள ராக்கெட் பூஸ்டரை இஸ்ரோவானது வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது “ஆந்திராவின் ஸ்ரீ ஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படும் பூஸ்டர் சோதிக்கப்பட்டது. இஸ்ரோ தலைவரும் விண்வெளித் துறையின் செயலருமான சோம்நாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் போன்றோர் முன்னிலையில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக 203 டன் திட உந்து சக்தியுடன் ஏற்றப்பட்ட எச்.எஸ்.200 பூஸ்டர் 135 வினாடிகளுக்கு சோதிக்கப்பட்டது.
20 மீட்டர் நீளம் மற்றும் 3.2 மீட்டர் விட்டம் உடைய பூஸ்டர் திட உந்து சக்தியுடன்கூடிய உலகின் 2வது பெரிய செயல்பாட்டு பூஸ்டர் ஆகும். இச்சோதனையின்போது சுமார் 700 அளவு கோல்கள் கண்காணிக்கப்பட்டது மற்றும் அனைத்து அமைப்புகளின் செயல்திறன் சாதாரணமாக இருந்தது. இந்த சோதனையானது வெற்றியடைந்ததால் ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவானது இன்னும் ஒருபடி நெருங்கியுள்ளது. இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க அறிவியல் முயற்சியான இந்த திட்டம் ஒரு இந்தியரை விண்வெளிக்கு அழைத்துச்சென்று அவரைப் பாதுகாப்பாக திரும்பக் கொண்டுவரும் அதன் இறுதி இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறது” என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.