மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்” திட்டத்தின்சோதனை முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கூடியவிரைவில் இந்த திட்டமானது நடைமுறைபடுத்தப்படும் என்று இஸ்ரோவின் முன்னாள் தலைவரான சிவன் கூறினார். கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவன 12-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் வேந்தர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரபடுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, வாய்ப்பு எதுவாயினும் அதனை பயன்படுத்திக் கொள்ள நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தற்போது சவால்கள் நிறைந்த உலகை மாணவர்கள் எதிர்கொள்ள இருக்கின்றனர். அந்த ஒவ்வொரு சவாலும் நமக்கு புதிய அனுபவத்தை கற்றுத் தரும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட்ஏவுதளம் அமைவதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது மொத்தமாக 2,233 ஏக்கர் கையகப்படுத்தும் திட்டத்தில் 1,200 ஏக்கர் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சிறியளவிலான ராக்கெட்டுகளை எளிதாக செலுத்த முடியும்.
இதன் காரணமாக குலசேகரபட்டினம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்கள் கிடைப்பது எளிதாகும். இத்திட்டத்தில் மனிதரை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் அதற்கான தொழில்நுட்ப மேம்பாடு, விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தயார்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே விரைவில் இத்திட்டம் நிறைவேறும் என்று அவர் பேசினார்.