கக்கூஸ் செயலி மூலமாக சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கழிவறைகள் உள்ளன என்று அறிந்துகொள்ள முடியும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோமில் நடைபெற்ற சர்வதேச கழிப்பறை திருவிழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதயநிதி, திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி, மாநகராட்சி மேயர் துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் 600 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் சாதனங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் கழிப்பறை கண்காட்சியை பார்வையிட்டு கக்கூஸ் செயலியை துவக்கி வைத்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின் தன்னை விட தனது மனைவி கிருத்திகா உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிக பணிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் கக்கூஸ் செயலி மூலமாக சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கழிப்பறைகள் உள்ளன என்று அறிந்து கொள்ள முடியும் என்றும் சென்னையில் உள்ள 15 பொது கழிப்பிடங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் பயன் படும் விதமாக இந்த கக்கூஸ் செயலி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.